பிருகு முனிவர் வைகுண்டத்தில் பெற்ற மாலையை இந்திரனுக்குத் தர, அவன் அதை தனது யானையான ஐராவதத்திற்குச் சூட்டினான். ஆனால் யானை அப்பூமாலை எடுத்து காலால் மிதிக்க, கோபம் கொண்ட பிருகு முனிவர் இந்திரனது செல்வ போகங்களை இழக்குமாறு சபித்தார். இந்திரன் விமோசனம் வேண்ட, ஆதனூர் தலத்திற்கு சென்று வழிபட சாபம் நீங்கும் என்று தெரிவித்தார். இந்திரனும் அவ்வாறே செய்து சாபவிமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவர் ஆண்டளக்கும் ஐயன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தலையின் கீழ் மரக்காலும், இடது கையில் எழுத்தாணியும் உள்ளது. தாயாருக்கு 'ரங்கநாயகி' என்னும் திருநாமம். பெருமாளின் திருவடி அருகில் திருமங்கையாழ்வாரும், காமதேனுவும் உள்ளனர். இருவருக்கும் ஆண்டளக்கும் ஐயன் பிரத்யக்ஷம்.
சிறிய அழகிய கோயில். அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு வசதிகள் ஏதுமில்லை. அருகிலேயே திருப்புள்ளம்பூதங்குடி தலம் உள்ளது. இரண்டையும் சேர்த்து சேவிக்கலாம்.
இத்தலத்தில் திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|